பதிவு:2022-05-24 15:20:38
தொடுகாடு கிராம நிர்வாக அலுவலர் மீது பல கோடி ரூபாய் வரி வசூலாக வேண்டிய ஊராட்சியில் லட்சக் கணக்கில் மட்டுமே வரி வசூலாவதாக கணக்கு காட்டுவதாக ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
திருவள்ளூர் மே 25 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சியின் தலைவராக இருப்பவர் பி.வெங்கடேசன். இந்த ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட பெரிய, மற்றும் சிறிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் குமரன் என்பவர் மீது ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து மனு அளித்தார்.
அதாவது கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் வகைப்பாடு செய்து அதன் விவரங்களை கிராம ஊராட்சி மன்றத்திற்கு வழங்கவில்லை என்றும், வருவாய் சம்மந்தப்பட்ட விஷயங்களை பொது விளம்பரம் மற்றும் தண்டோரா மூலம் பொது மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது கிடையாது என்றும் தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், கிராமத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் வரி வசூல் செய்வதில் ஒரு அடிக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் வீதும் வசூலிப்பதற்கு பதிலாக 30 பைசா மட்டுமே வசூல் செய்வதாக தெரியவருகிறது என்றும் ஒரு லட்சம் சதுர அடி கொண்ட தொழிற்சாலை 10 ஆயிரம் சதுர அடியில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பல கோடி ரூபாய் வரி வசூல் ஆக வேண்டிய ஊராட்சியில் லட்சக் கணக்கில் மட்டுமே வரி வசூலாவதாக கணக்கு காட்டுவதாகவும் அதனால் கிராம வளர்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் தடையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நிலமற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடியிருக்க வீட்டு மனை இல்லாத 500 பேருக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்காமல் மற்ற கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வீட்டு மனை கொடுப்பதாகவும், இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரியும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.