பதிவு:2022-05-26 13:12:50
திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் இடுபொருட்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, விவசாயிகளோடு கலந்துரையாடினார்.
அப்பொழுது திரூர் கிராமத்தில் ஏரிபாசன சங்கத் தேர்தல் நடத்தும் பொழுது ஏற்கனவே பதவியில் இருக்கும் சங்கத் தலைவர் பதவிகாலம் ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெறாத காரணத்தினால் மீண்டும் அவரையே தலைவராக்க பரிந்துரை வைத்தார். தன்டர ஏரி கால்வாய் புனரமைத்தல். புதுமாவிலங்கை கிராமத்தில் வண்டிப் பாதை அகற்றுதல் திருத்தணி சர்க்கரை ஆலையை நடப்பு ஆண்டில் முன்கூட்டியே அரவைக்கு ஆவன செய்தல். முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தல். சர்க்கரை ஆலையில் பின்பற்றும் ஒதுக்கீடு முறையினை நிறுத்தி வைத்தல். கூடுதல் பொறுப்பில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா மாற்றம் வழங்க தடை செய்தல், வருவாய் கோட்ட அளவில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தினை போலவே நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி ஆட்கள் நியமனம் செய்து அரசு கட்டுப்பாட்டின் கீழ் கூலி வழங்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கலில் மூன்று போக சாகுபடியும் பதிவு செய்யப்படும் எனவும், சோமதேவம்பட்டு எறையூர் பகுதிகளில் ஆற்று மணல் அள்ளுவதை தவிர்க்கவும் தடப்பெரும்பாக்கம் ஏரி, அவிச்சேரி ஏரி சாகுபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மெப்பூர் கிராம களம்பெரும் போக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கொசஸ்தலையாறு மற்றும் ஆரணியாறு வடிநிலக் கோட்ட பாசனக்கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கென தனியாக முதன் முறையாக “உழவனைத் தேடி” யூ டூப் சேனலை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 6 விவசாயிகளுக்கு ரூ. 8,295 மானிய விலையில் மின்கல தெளிப்பான், நெட்டை ரக தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள், அங்கக இடுபொருட்கள், நெகிழி கூடைகள், காய்கறி விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் திருவள்ளூர் மாவட்டத்தில்; “தென்னை சாகுபடி ஒரு கண்ணோட்டம்” குறித்த விளக்க காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த காண்காட்சியுடன், தோட்டக்கலைத்துறை கண்காட்சி அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் விவசாயிகள் 105 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தனர். அக்கோரிக்கைள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர்ப் பாசனம்) வெ.தபேந்திரன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.