பதிவு:2024-08-16 18:22:05
திருவள்ளூரில் 78 வது சுதந்திர தினவிழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார் :
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும பறக்கவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் 23 சுதந்திர போராட்ட தியாகிகள், 4 மொழி போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு, முதல்நிலை அலுவலர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இல்லம் தேடி கல்வி, பொதுப்பணித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 412 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார்.
மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பயனாளிகளுக்கு பல்வேறு சுயதொழில் தொடங்குவதற்காக ரூ.4469000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நான்கு பயனாளிகளுக்கு ரூ. 23 ,760 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.7280 மதிப்பில் சலவை பெட்டியும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.15,13,545 மதிப்பில் வேளாண் சார்ந்த பொருட்களும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ5,42,762 மதிப்பீட்டின் வங்கி கடன் உதவிகளும் ஆக மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.65,56347 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் பாரதமும் சிலம்பமும் என்ற கலை நிகழ்ச்சியும், அயப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கோலாட்டம் நிகழ்ச்சியும், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சியும், பெரியகுப்பம் ஜேக்கப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசப்பற்று பாடல் நிகழ்ச்சியும், ஆவடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசப்பற்று பாடல் நிகழ்ச்சியும், ஆவடி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பிரமிட் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன . இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), க. தீபா (திருத்தணி), மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர்கள் புகழேந்தி, செல்வம், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.