பதிவு:2022-05-26 13:16:52
திருவள்ளூர் அருகே விவாகரத்து கேட்டு சென்றவரின் ரூ.7 கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலத்தை திமுக வழக்கறிஞர்கள் தனது பெயருக்கு மாற்றம் செய்து நூதன மோசடி : பாதுகாப்பு கேட்டு திருவள்ளூர் எஸ்.பி யிடம் புகார்
திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவருக்கு பேரம்பாக்கம் அடுத்த ராணிப்பேட்டை மாவட்டம் புதுகேசாவரம் பகுதியில் 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 வயது நிரம்பிய விவசாயியான இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் கணவன் மனைவிக்கு மிடையே உள்ள பிரச்சினை காரணமாக விவாகரத்து கேட்டு திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ஸ்ரீமுருகன் மற்றும் அவரது சகோதரர் ஜெய்சுந்தர் ஆகியோரை லட்சுமிபதி அணுகியுள்ளார்.
அப்போது லட்சுமிபதி பெயரில் உள்ள சொத்துக்களை வேறு ஒருவருக்கு எழுதி கொடுத்துவிட்டால் உன்னிடமிருந்து எந்த ஒரு சொத்தையும் உன் மனைவிக்கு கொடுக்க வேண்டியிருக்காது என்றும், விவாகரத்து முடிந்ததும், மீண்டும் அந்த சொத்துக்களை உன் பெயருக்கு மாற்றம் செய்து தருகிறேன் என மோசடி செய்யும் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சொத்து ஆவணங்கள் தனது மகனிடம் இருப்பதாக லட்சுமிபதி தெரிவித்ததால், மணவாளநகர் காவல் நிலையத்தில் ஆவணங்கள் தொலைந்து போனதாக புகார் செய்து சான்றிதழ் பெற்று அதனைக் கொண்டு கடந்த 2019ல் ஸ்ரீமுருகனின் சகோதரர் ஜெய்சுந்தர் என்பவர் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார பத்திரம் எழுதிக்கொண்டுள்ளார்.
விவாகரத்து வந்ததும் அந்த சொத்துக்களை உன் பெயருக்கு மாற்றி தருவதாக கூறி லட்சுமிபதியை அவர் வீட்டிற்கு அனுப்பாமல் தண்டலம் என்ற இடத்தில் தங்க வைத்து அவரிடம் மனைவி பற்றியும் தவறான தகவல்களை சொல்லி, சொத்துக்காக உன்னை கொலை செய்துவிடுவார்கள் என்றும் பயமுறுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வீட்டைவிட்டு எங்கேயும் வெளியே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி விவாகரத்து வழக்கிற்கு வரும் போது தாங்கள் சொல்வதை தான் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டி, நாங்கள் சொல்வதை கேட்டால் உன் சொத்து உனக்கு கிடைக்கும் என்றும் இல்லையேல் உன்னை கொன்றுவிடுவோம் என்றும் திமுக வழக்கறிஞர்கள் ஸ்ரீமுருகன், ஜெய்சுந்தர், ஆகியோர் பகிரங்கமாக மிரட்ட தொடங்கியுள்ளனர்.
மேலும் நிலம் சம்மந்தமான வழக்கு காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் நிலுவலையில் இருப்பதால் உன்னை அனுப்ப முடியாது என்றும், வழக்கு முடிந்தால் தான் அனுப்புவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர். லட்சுமிபதியின் உடல் நிலை மோசமானதையடுத்து கடந்த 22-ந் தேதி மகன், மகள் ஆகியோரிடம் தகவலை சொல்லி என்னை இவர்களிடமிருந்து மீட்டுச் செல்லுங்கள் என சொல்லி இந்த கும்பலிடமிருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து இவர்கள் லட்சுமிபதியை பாதுகாப்பாக அழைத்து வந்து சாப்பிடாமலும், மன உளைச்சளில் இருப்பதாலும் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
அதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஸ்ரீமுருகன் மற்றும் ஜெய்சுந்தர் ஆகியோர் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டே இருக்க இவர்கள் இருக்கும் இடத்தை சொல்லாமல் தவிர்த்துவிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் லட்சுமிபதி புகார் மனுவை அளித்தார். அதில் விவாகரத்து கேட்டு திமுக வழக்கறிஞரிடம் சென்ற போது தனது 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தன் பெயருக்கு மாற்றியதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், எங்கள் உயிருக்கு எது நேர்ந்தாலும் அது அவர்களையே சாரும் என்றும், சொத்தை மீண்டும் தனது பெயருக்கு மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி வருண்குமார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து லட்சுமிபதி குடும்பத்தார் கிளம்பி சென்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்குமிடையே விவாகரத்து கேட்டு சென்றவரிடம் திமுக வழக்கறிஞர்கள் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.