பதிவு:2024-08-18 21:17:44
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறப்போராட்டம்
திருவள்ளூர் ஆக 17 : மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண் டாக்டர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த முதுகலை மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் மருத்துவர்கள் ஜெகதீசன், விஜயராஜ், ராஜ்குமார் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ - மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தமிழகத்திலும் மருதர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், மருத்துவமனையில் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாவலர்கள் இல்லாததால் திருவள்ளூர் மருத்துவமனையிலேயே மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் தமிழக அரசு உடனடியாக போதிய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.