பதிவு:2024-08-20 10:30:40
திருவள்ளூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை : திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை :
திருவள்ளூர் ஆக 19 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வி.எம்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாராஜ் (65). இவர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வாணிஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமாராஜ் தனது இளைய மகன் தினேஷ் என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்து முதல் பத்திரிகையை பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தோடு கடந்த 17-ஆம் தேதி திருப்பதிக்கு சென்று நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 சவரன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அதே பீரோவில் வேறொரு டிராயரில் வைத்திருந்த 10 சவரன் நகை தப்பியது தெரியவந்தது. மேலும் சாப்பிடுவதற்காக வைத்திருந்த முந்திரியை சாப்பிட்டுவிட்டு மீதியை கீழே போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணம்மராஜ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மகனின் திருமணத்திற்கான பத்திரிகையை கொடுக்க சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.