பதிவு:2024-08-20 10:35:56
திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஆக 20 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு (SR) நாளது தேதி வரை பதிவு பராமரிக்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர் அனைவருக்கும் (ATM) மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிதிப் பயன்களும் (ATM) மூலம் வழங்கப்பட வேண்டும். (ஆர்.கே. பேட்டை) பெத்தராமாபுரம். எரும்பி, வீராளத்தூர், வங்கனூர் (PACCS) மேற்கண்ட சங்கங்களில் பணிபுரியும் விற்பளையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
பதிவாளர் சுற்றறிக்கையின்படி 10 ஆண்டு முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டு முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும். திருவள்ளூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் தகுதியுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு முறையே பதிவாளர் சுற்றறிக்கையின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் எடையாளர் பதவியிலிருந்து விற்பனையாளர் பதவி உயர்வும், விற்பனையாளரிலிருந்து எழுத்தர் பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.
அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்க வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களின் பணிக்கொடை ஆண்டுக்கொருமுறை (கிராஜவிட்டி) LIC அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். மேலும் பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சரிசெய்து வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை அலுவலகத்தில் இறக்குவதற்கு ஆவண செய்யப்பட வேண்டும்.
அதில் காலி சாக்குகளை கட்டுவதற்கு கட்டுக் கூலியும், அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு லாரி வாடகையும் வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட நியாயவிலை பணியாளர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 5 -ந் தேதி தமிழக முழுவதும் நியாயவிலை பணியாளர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.