பதிவு:2024-08-21 11:49:24
திருப்பாச்சூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை :
திருவள்ளூர் ஆக 21 : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் தனியார் மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வை. ஜெயக்குமார் முன்னிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவி காலம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் உள்ள நிலையில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது இவ் விழிப்புணர்வு பதவி காலம் முடிந்துவிட்டது என்று கருதாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி ஊராட்சி தலைவர்களுக்கான பதவி மிகவும் முக்கியமான ஒன்றாகும். பஞ்சாயத்து ராஜ் மூன்றடுக்கு தலைவரே உள்ளடக்கியதாகும் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் போன்ற மூன்று அடுக்கு கொண்டது.
அதில் கிராம ஊராட்சி தான் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது. எனவே கிராம ஊராட்சி தலைவர்கள் அதிகாரத்துடன் தங்களது பொறுப்புகள் மற்றும் கடமைகளை என்னவென்று தெரிந்து கொண்டு சிறந்த பண்புகளுடன் திகழ வேண்டும். குறிப்பாக பெண் ஊராட்சித் தலைவர்கள் கணவர்கள் துணையின்றி தாங்களாகவே பணியாற்ற வேண்டும். எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஊராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள். ஆகவே பெண் கிராம ஊராட்சி தலைவர்கள் உங்களது கடமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு சிறப்பான தலைமை பண்பை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிராம ஊராட்சித் தலைவர்கள் கிராமப்புறங்களில் உள்ள சாதிய பாகுபாடு, பாலினம் வேறுபாடுகளை, ஒழித்து சமூக நீதியினை நிலை நாட்ட வேண்டும். பொருளாதாரத்தினால் எந்த ஒரு மாநிலமும் உயரவில்லை.
சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஜாதி வேறுபட்ட அனைத்து சமூகத்தினரும் சமம் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக கிராம ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனடைந்த உங்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டது அதனால் தான் நாம் சமுதாயத்தில் உயர்ந்திருக்கிறோம். எனவே வன்கொடுமை ஜாதி வேறுபாடு கிராமப்புறங்களில் அதிக அளவு காணப்படுகிறது அதனை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியினை வளர்க்க வேண்டும் எனவே ஊராட்சி தலைவர்கள் தங்களுடைய கடமைகளின் பொறுப்புக்களை உணர்ந்து திறமையான ஆளுமை பண்பை நிலை நாட்ட வேண்டும்.
மேலும், ஊராட்சிகளில் கிராம ஒழிப்பு கூட்டங்கள் வாயிலாக பள்ளிக்கு செல்ல குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அது மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடைபெறாமல் இருப்பதற்கு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கிராம பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மையை கையாள்வதில் சிறப்பாக செயல்பட வேண்டும். திடக்கழிவு பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களிடம் உங்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் ஒவ்வொருவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
மேலும் உங்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் தாட்கோ திட்டங்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துருக்கள் வழங்க உள்ளார்கள் எனவே இந்த விழிப்புணர்வு கருத்தரங்கினை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் கிராம ஊராட்சியினை மேம்படுத்துவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ப. செல்வராணி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பரணி, முன்னாள் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் இளையராஜா, தனி வட்டாட்சியர் (ஆதிந) மதியழகன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.