பதிவு:2024-08-22 15:39:13
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக நிறுத்தப்படும் நடைமேடை மாறி வேறொரு நடைமேடையில் ஏலகிரி விரைவு ரயில் வரும் என கடைசி நிமிட அறிவிப்பால், பயணியர் கடும் அவதி :
திருவள்ளூர் ஆக 22 : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை நேரத்தில், சென்னைக்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். பெரும்பாலானோர், காலை 8 மணியளவில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வழித்தடம் எண்.16090 என்ற ஏலகிரி விரைவு ரயிலில் பயணிக்கின்றனர். அதிக பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கம் போல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வரும்போது நடைமேடை 1-இல் நின்று செல்வது வழக்கம். இதே போல், நேற்று காலை, 300 க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் பயணம் செய்ய, நடைமேடை 1-இல் காத்திருந்தனர்.
ஆனால், ரயில் வருவதற்கு முன் கடைசி நிமிடத்தில், ஏலகிரி விரைவு ரயில் நடைமேடை 3-இல் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டது.இதனால், நடைமேடை 1-இல் காத்திருந்த பயணியர், ரயிலை பிடிக்கும் அவசரத்தில், ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் இறங்கி நடைமேடை மாறி, சென்றனர்.அந்த சமயத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், 2-வது நடைமேடை ஒட்டிய தண்டவாளத்தில் அதிவேகத்தில் வந்ததால், அதனை கண்ட பயணியர் அலறி அடித்து, ஒதுங்கி நின்றனர்.நல்வாய்ப்பாக எவ்வித அசம்பாவிதமும் நேரிடவில்லை.இதுகுறித்து ரயில் பயணியர் சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது:
ரயில் வருவதற்கு கடைசி நிமிடத்தில் தான், அறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே, ரயில் வருவதற்கு, 15 நிமிடத்திற்கு முன் அறிவிக்க வேண்டும். மேலும், ரயில் வருகை, புறப்பாடு குறித்து தகவல் தெரிவிக்கும் பலருக்கும் தமிழ் தெரியாததால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் அறிவிக்கின்றனர். இதனால், படிக்க தெரியாத பாமர மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, தமிழிலும் அறிவிக்க வேண்டும். இதுகுறித்து, சென்னை கோட்ட மேலாளருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.