பதிவு:2024-08-23 16:03:04
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 23 : 2024-2025 ஆம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உயிர்ம வேளாண்மையில் திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற விவசாயிகளும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட செய்யும் விவசாயிகளுக்கும் நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்படும். இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறியதாவது :
உயிர்ம வேளாண்மை முறை இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். உயிர்ம வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர்ம கழிவுகளை நன்றாக மக்கச் செய்து, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு அளிப்பதன் மூலம் அதை பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. நுண்ணுயிர்கள் மெதுவாகவும் சீராகவும் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சுற்றுச் சூழலில் பயிர்கள் வளர்ந்து விளைபொருட்களை உற்பத்தி செய்ய முடியும். உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை இரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண் வளத்தையும் பாதுகாப்பது ஆகும்.
இத்திட்டத்தின் நோக்கமானது உயிர்ம விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்துதல், உயிர்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை கௌரவித்தல், உயிர்ம விவசாயத்தை முறையாக கடைபிடித்து வெற்றி காணும் விவசாயிகளைக் கண்டு, அவர்களின் உதவியுடன் இதர விவசாயிகளும் உத்வேகத்துடன் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட தூண்டுதல், உயிர்ம வேளாண்மை மூலம் தானியப் பயிர்களில் உற்பத்தித் திறனை மாநில அளவில் உயர்த்துதல், உயிர்ம வேளாண்மைப் பயிர்களில் உற்பத்தியை உயர்த்தும் எண்ணம் விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்தல், அந்தந்த பகுதிக்கேற்ற பிரதானப் பயிர்களில் மாநிலஅளவில் உயிர்ம வேளாண்மையில் அதிக உற்பத்தித் திறன் அடைவதை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழு நேர உயிர்ம விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இத்திட்டத்தில் வெற்றி பெரும் மூன்று விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருதுடன் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.5 இலட்சம் மற்றும் ரூ.10000 மதிப்புடைய பதக்கம். இரண்டாம் பரிசு ரூ 1.5 இலட்சம் மற்றும் ரூ.7000 மதிப்புடைய பதக்கம். மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ. 5000 மதிப்புடைய பதக்கம்.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வளைதளத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான பதிவுக் கட்டணம் ரூபாய் 100 ஆகும். மேலும், இது தொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.