பதிவு:2024-08-27 15:12:45
சதுரங்க பேட்டையில் 290 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்க பேட்டை பகுதியில் தொல்குடியினர் வேளாண்மை, மேலாண்மை திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு நலத்திட்ட உதவிகளை அரசு செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஜி .லட்சுமி பிரியா தலைமை தாங்கினார்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி .ஜி. ராஜேந்திரன், அரசு கூடுதல் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு 290 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது : தொல்குடி வாழ்வாதார ஐந்திணை திட்டத்தின் கீழ் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மூலம் பழங்குடியின மீனவர்களின் வளர்ச்சிக்காக ரூ.37.19 லட்சம் மதிப்பிலான திட்டம் 90 பயனாளிகள் பயன்பெற்றனர். மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு மாதிரி திட்டம் தொடங்கியுள்ளது. ரூ.202 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தேசிய மீன்வள மரபணு பேனகம், கொச்சி நிறுவனம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்குப்பம் ஊராட்சியில் செஞ்சியம்மன் நகரில் 100 பழங்குடியின குடும்பங்களுக்கு வண்ண மீன் வளர்ப்பு, தொழில்நுட்பத்துடன் கூடிய நண்டு வளர்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பண்ணைகள் ஏற்படுத்தி பயிற்சிகள் வழங்குவதற்காக ரூ.87.61 லட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 290 பயனாளிகள் ரூ.176.88 லட்சம் மதிப்பீட்டில் பயனடைகிறார்கள் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.முன்னதாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை அமைச்சர் பார்வையிட்டு, பூண்டி ஏரியில் பயனாளிகளுக்கு படகு வழங்கி சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் எஸ்.அண்ணாதுரை, இயக்குநர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,திட்ட மேலாளர் பொன்வைத்தியநாதன், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அலுவலர், செல்வராணி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திட்ட முதன்மை ஆய்வாளர்கள், ரூபாநந்தினி, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன், முனைவர்.டி.டி.அஜித்குமார் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் (NBFGR, கொச்சி), ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.