பதிவு:2024-08-27 15:14:39
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தொல்தமிழர் வரலாறும், ஆய்வுகளும்” குறித்த கருத்தரங்கம் :
திருவள்ளூர் ஆக 27 : வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கான “தொல்தமிழர் வரலாறும், ஆய்வுகளும்” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மா.அபிராமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஏ.வி.கே. சாந்தி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும் போது, “ நமது பழமையை அறிந்து கொள்வது, அறிவின் வளர்ச்சியை நாம் புரிந்து கொள்வதற்கு மிகுதியும் பயன்படுகிறது. ஒழுகலாறுகளின் வரலாறுகளைத் தேடிச் செல்கிறபோது, முன்னோர்களின் கலை, அறிவியல் சிந்தனைகள், திறமைகள் என எல்லாவற்றையும் நாம் அறிந்து கொள்கின்றோம். இளையசமூகம் மேன்மையடைவதற்கு இத்தகு கருத்தரங்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து துணைமுதல்வர் எம்.ஆர்.சசிகலா பேசுகையில், “ பாடம் சார்ந்த மையப்பொருளினை இக்கருத்தரங்கம் கொண்டிருப்பதால், மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கும்” என்றார். திட்ட அலுவலர் வா.வடிவேலு மற்றும் நிர்வாக அலுவலர் என்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் செ.சு.நா.சந்திரசேகரன் கருத்தரங்கின் மையப்பொருள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொல்தமிழக ஆய்வுகள் குறித்த காணொளிக் காட்சிகள் வெளியிடப்பட்டன. அவை குறித்த விளக்க உரைகளைப் பேராசிரியர்கள் கு.இரமேஷ், க.சரவணன், கே.இரமேஷ், இராஜதுரை ஆகியோர் உரையாற்றினர். சுமார் 550 மாணவர்கள் இரண்டு நாள் கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர்.