பதிவு:2024-09-03 11:40:28
தண்ணீர் குளம் அருகே மண் லாரி மோதி இளைஞர் பலி : உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் :
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் அடுத்த சிற்றத்தூர் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார் (35). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். தண்ணீர் குளம் அடுத்த தண்டலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் அரசு குவாரியில் இருந்து மண் எடுப்பதற்காக வந்த லாரி வேகமாக வந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பலியானார்.
இதனையடுத்து வினோத்மாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானவரின் குடும்பத்தார் கதறி அழுத்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய் கிருஷ்ணா மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பலியானவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனை அடுத்து வினோதமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் லாரிகள் செல்வதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றது. எனவே காவல்துறை வேகமாக செல்லும் லாரிகள், தார்பாய் போடாமல் மண் எடுத்துச் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.