பதிவு:2024-09-03 11:41:51
திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் செப் 03 : விளையாட்டுத்துறையில் சர்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகின்றன.உதவித் தொகை பெற சர்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.சர்வதேச,தேசிய போட்டிகளில் முதலிடம்,இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச,தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள். இதற்கு 2024 ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் (31.08.2024) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000 ஆக இருத்தல் வேண்டும்.ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்,மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.இவ்வாணைய இணையதளத்தில் 01.09.2024 அன்று முதல் 30.09.2024 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.