பதிவு:2024-09-04 11:42:38
கும்மிடிப்பூண்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு :
திருவள்ளூர் செப் 04 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பூவாலை கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பாதை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பூவாலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் வார்டு கிளைச் செயலாளர் வாசு தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்தக் கிராமத்திற்கான மயானத்திற்கு செல்வதற்கு போதுமான வழியின்றி உள்ளோம். அதனால், தனியார் நிலங்களை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதுபோன்று செல்லும் போது தனிநபர்கள் தகாத வார்த்தைகள் பேசுகின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்தில் பேச்சுவார்த்த நடத்தினோம்.
அப்போது, மயானத்திற்கு செல்லும் வழியில் 5 பட்டதாரர்களில், 3 நபர்கள் மயானத்திற்கு பாதை வசதிக்காக இடம் ஒதுக்க ஒப்புக்கொண்டனர். இதில் மீதமுள்ள இருவர் எக்காரணம் கொண்டு வழிவிடமாட்டோம். அதோடு தரக்குறைவாகவும் பேசி வருகின்றனர். அதனால், எங்கள் நிலையறிந்து நேரில் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தி மயான பாதை இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.