பதிவு:2024-09-04 11:44:47
திருவள்ளூர் அருகே வாங்கிய கடனை வேலை செய்து கழித்த நிலையில் பழங்குடியின கூலித் தொழிலாளியை தாக்கியதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை : உடலை வாங்க மாட்டோம் என மனைவி ஆட்சியரிடம் புகார்
திருவள்ளூர் செப் 04 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் அப்பகுதியில் மல்லிகை தோட்டங்களில் பூப்பறிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவரிடம் தோட்ட வேலை செய்வதற்காக முன்பனமாக 20 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதில் தோட்ட வேலை செய்து சிறிது சிறிதாக வாங்கிய கடனை கழித்து வந்த நிலையில் முழுவதுமாக கடன் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில மாதங்களாக வேலு அறிவழகன் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாததை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அறிவழகன் வேலு வீட்டிற்கு வந்து தோட்டத்திற்கு வேலைக்கு வருமாறும் அல்லது வாங்கிய கடனுக்கு வட்டி 20 ஆயிரம் செலுத்துமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டுக்குள் புகுந்து மனைவி கண் முன்னே தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த வேலு கடந்த 27ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எனவே அவரது மரணத்திற்கு காரணமான ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
வேலுவின் மனைவி தங்கம்மாள் மற்றும் மூன்று குழந்தைகள் உறவினர்களுடன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். வாங்கிய கடனனை வேலை செய்து கழித்த நிலையில் அதே அளவு வட்டியை கட்ட கூறி பழங்குடியின கூலித் தொழிலாளியை தாக்கியதால் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.