பதிவு:2024-09-10 10:31:37
சென்னை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் துன்புறுத்தும் வகையில் பேசிய மகாவிஷ்ணுவை கண்டித்து திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் செப் 09 : சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்து அவதூறாக பேசியதாக மகா விஷ்ணு மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைதாப்பேட்டை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகா விஷ்ணுவை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.சென்னை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் துன்புறுத்தும் வகையில் மகாவிஷ்ணு பேசியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகாவிஷ்ணுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை துன்புறுத்த வகையில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மகாவிஷ்ணு தான் பேசியது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் எனக்கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.