பதிவு:2024-09-10 10:40:28
திருவள்ளூர் மாவட்டத்தில் 909 பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் கடந்தாண்டை விட நிகழாண்டில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவள்ளூர்196, திருத்தணி 297, ஊத்துக்கோட்டை 220, கும்மிடிப்பூண்டி 196 என மொத்தம் 909 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் 909 இடங்களில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் திருவள்ளூர் பகுதிகளில் மட்டும் 196 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை விசர்ஜன ஊர்வலமாக செல்வதற்காக ஆயில் மில் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு வந்து அங்கிருந்து விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக அரசு விதிமுறைப்படி ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்பட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோயில் தேரடி வீதி, குளக்கரை சாலை, பஜார்வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க பக்தர்கள் பக்தி பாடல்கள் ஒலிபரப்பியபடி கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து காக்களூரில் ஏரியில் பெரிய அளவிலான நீர் நிரப்பி வைத்திருந்த பள்ளத்தில் ஒவ்வொரு சிலையாக விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மு.வினோத்கண்ணா, மாவட்ட செயலாளர் கராத்தே செல்வா, பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் அஷ்வின், மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், இளைஞரணி மாவட்ட தலைவர் டில்லிபாபு, சித்ரா தேவி, பா.ம.க சார்பில் வ.பாலயோகி, தினேஷ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை - திருப்பதி சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆய்வாளர் ள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.