பதிவு:2024-09-11 14:28:03
திருவள்ளூரில் தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :
திருவள்ளூர் செப் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் தூய்மை சேவை-2024 ,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் வாயிலாக பொது மக்களிடையே பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி பொதுமக்களிடையே சுகாதார முன்னேற்றத்தின் மன மாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 வரையிலான காலத்தில் பொதுமக்களுடன் இணைந்து பொது இடங்களில் பெரு அளவில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தூய்மை காவலர்கள் மற்றும் இதர துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படுத்துதல் பசுமை மற்றும் தூய்மை கிராமங்களை,நகர்பகுதிகளை உருவாக்குதல், மகளிர் குழுக்கள் மூலம் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் நெகிழிக்கு மாற்று பொருட்களை உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் மேம்பாடு திட்டம், கல்வித்துறை, பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் துறை, இந்து சமய அறநிலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை. மாசுக்கட்டுப்பாட்டு துறை மற்றும் சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொண்டு "தூய்மை திருவள்ளூர்" நிலையினை தக்க வைக்கும் பொருட்டு தூய்மையே சேவை நிகழ்வினை திறம்பட செயல்படுத்த பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபட்டு தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த,பிரபுசங்கர் அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் பேரூராட்சிகள் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.