பதிவு:2024-09-17 12:12:58
பெரிய குப்பத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி திமுக கவுன்சிலர் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :
திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என திருவள்ளூர் நகர மன்ற திமுக உறுப்பினர் எஸ்.தனலட்சுமி மற்றும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மேற்பட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் திரிகின்ற மக்கள் மத்தியில் வசிக்கும் சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்து வருவதாகவும், அதிகமாக மக்கள் கூடுகிற குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற மதுபான கடைகள் இருப்பதால் பெண் பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம்.
இதுவரை பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மதுபான கடையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் 26 ஆவது வார்டு உறுப்பினர் எஸ் தனலட்சுமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் டாஸ்மாக்கால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என திமுக கவுன்சிலரே கலெக்டரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.