பதிவு:2024-09-19 12:32:16
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் 9 அடி சாரைப் பாம்பு மீட்பு :
திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்திற்குள் புகுந்த 9 அடி நீள சாரைப் பாம்பை அரை மணிநேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் புதன்கிழமை வழக்கம் போல் திறந்து தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த அறைக்குள் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் சாரை பாம்பு ஒன்று பதுங்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணிநேரம் போராடி அலுவலகத்தில் பதுங்கியிருந்த 9 அடி நீள சாரைப்பாம்பை பிடித்து பூண்டி ஏரி செல்லும் வழியில் காப்பு காட்டுப் பகுதியில் விட்டனர்.