பதிவு:2024-09-19 12:34:19
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற இளைஞர் கைது :
திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் அருகே அரசு மதுபான கடை எதிரே அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்ற இளைஞரை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து மதுபான புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில் மிலாது நபி நாளையொட்டி அரசு மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே ஐவேலி அகரம் மதுபான கடை எதிரே அரசு விதிமுறை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வதாக நகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
அதன்பேரில் சார்பு ஆய்வாளர் ராக்கி குமாரி மற்றும் போலீஸôர் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் அங்கிருந்த நபர் தப்பியோட முயற்சித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸôர் சுற்றிவளைத்து பிடித்த சோதனை செய்த போது சணல் பையில் வைத்து கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டம் வடக்குப்பட்டியைச் சேர்ந்த சௌந்தராஜன் மகன் வேல் பிரபாகரன்(22) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 மதுபான புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் வேல் பிரபாகரனை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.