பதிவு:2022-05-31 14:57:26
ஈகுவார்பாளையம் கிராமத்தில் 144 பயனாளிகளுக்கு ரூ.24.32 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஈகுவார்பாளையம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 144 பயனாளிகளுக்கு ரூ.24.32 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஈகுவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 63 பழங்குடியினர் மக்களுக்கும், மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 43 பழங்குடியினர் மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களும், மாதர்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20 முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.24,32,512 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஈகுவார்பாளையம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் 2016-ம் ஆண்டு புதிய கால்நடை கிளை நிலையமாக தோற்றுவிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 30.11.2018 முதல் கால்நடை மருந்தகமாக செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட 20 சென்ட் நிலம் ஒதுக்கீடு பெறப்பட்டு, 2020-2021-ம் ஆண்டு நபார்ட் ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள அரசு இசைவாணை பெறப்பட்டது. 20.12.2021 அன்று மதிப்பிற்குரிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தினை பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்து, அவ்வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த கால்நடை மருந்தக புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதனால், ஈகுவார்பாளையம் கால்நடை மருந்தகம் சுற்றியுள்ள கிராமங்களின் சுமார் 5,000 கால்நடை அலகுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கால்நடை மருத்துவ சேவை மற்றும் திட்டப் பணிகள் மேம்படுவதோடு கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரமும் மேம்பாடு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன், உதவி ஆட்சியரும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஏ.பி.மகாபாரதி,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் எஸ்.ராமன், தனி வட்டாட்சியர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.