பதிவு:2024-09-26 12:49:24
திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை கஞ்சா, குட்கா போதை பொருட்கள், கள்ளச்சாராய வழக்கில் 447 பேர் மீது வழக்கு பதிவு : 523 பேர கைது செய்து மாவட்ட காவல்துறை அதிரடி :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி திருத்தணி ஆகிய நான்கு உட்கோட்டத்தில் 22 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் திருத்தணி ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டியில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தவும், குட்கா போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான திருவள்ளூர் மாவட்டத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கார் வேன் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள் மூலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைது மற்றும் பறிமுதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.அதன்படி கடந்த ஜனவரி 1 முதல் நேற்று முன்தினம் வரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் எஸ் பி சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 86 வழக்குகள் பதிவு செய்து, 141 பேர் கைது செய்யப்பட்டு 239 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.24 லட்சத்து 74 ஆயிரத்து 960. இதில் கடத்தலுக்கு பயன்படுத்திய 17 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் 4 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 38 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.1 கோடியே 13 லட்சத்து ஆயிரத்து 201 முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளை வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.
அதேபோல் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 323 வழக்குகள் பதிவு செய்து 344 பேர் கைது செய்யப்பட்டு, 14 ஆயிரத்து 538.097 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 45 லட்சத்து 38 ஆயிரத்து 97 ஆகும். இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.கைது செய்யப்பட்ட 35 பேரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.21 லட்சத்து 52 ஆயிரம் முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 38 வழக்குகள் பதிவு செய்து 38 பேர் கைது செய்யப்பட்டு, 3245 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.32,450 ஆகும். கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பிரிவுகளின் கீழ் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.இந்த வழக்குகளில் தொடர்புடைய 11 பேர் கள்ளச் சந்தை தடுப்பு காவலில் அடைக்கப்பட்டும், 7 பேர் போதைப் பொருட்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டும் உள்ளனர்.இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.