பதிவு:2024-10-03 12:11:22
கோரமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் ஆகியோர் பங்கேற்பு :
திருவள்ளூர் அக் 03 : தேசப்பிதா மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். நரசிம்மராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 12,524 கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த கிராம சபையில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 225 சாலை பணிகள் முடிவு பெற்றுள்ளன. 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 42 சாலை பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் 4 சாலை பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன .
அது மட்டுமல்லாமல் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணிகள், விடியல் பயணம் திட்டத்தில் 420 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளார்.தாய் வீட்டு சீதனம் போல் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையும், கூட்டுறவு கடன் ரத்து, 2.5 இலட்சம் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் வழங்கியுள்ளார். அரசு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியருக்கு மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் ,விலை இல்லா புத்தகம் மற்றும் சீருடை, உயர்கல்வி தொடரும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு ரூ.1000 வழங்கி, முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார்.பின்னர் தூய்மையை சேவை -2024 உறுதி மொழியினை அமைச்சர் ஏற்றுக்கொள்ள அனைவரும் எடுத்துக் கொண்டார்கள்.தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியை சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கியும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை அமைச்சர் வழங்கினார்.
இதில் திட்ட இயக்குனர்கள் வை .ஜெயக்குமார் (ஊரக வளர்ச்சி முகமை), செல்வராணி (மகளிர் திட்டம்), உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, இணை இயக்குனர் (வேளாண்மை) முருகன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ராஜ்குமார், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திருத்தணி வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.