பதிவு:2022-03-15 20:47:05
சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட உள்ளன என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்: மார்ச் 15,
சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்து. இதில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரையை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் இன்று (நேற்று) முதல் ெதாடங்கி உள்ளது. இந்த முகாம் வருகிற 19-ந் தேதி வரை (திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும்) நடைபெற உள்ளது. மேலும் விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேவைக்கேற்ப நடைபெறும். மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய 11 லட்சத்து 11 ஆயிரத்து 84 பேருக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய 2 லட்சத்து 24 ஆயிரத்து 87 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்பட உள்ளன. இந்த பணியில் அனைத்து துறைகளை சேர்ந்த களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் நளினி, ஜெமினி, மாநகர நல அலுவலர் யோகானாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.