பதிவு:2022-05-31 15:03:03
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 57 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 41 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 48 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 62 மனுக்களும் என மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 32 பயனாளிகளுக்கு தலா ரூ.5,480 வீதம் ரூ.1,75,360 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, காதுகேளாத நான்கு மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.2,780 வீதம் ரூ.22,240 மதிப்பீட்டிலான 8 காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் முடநீக்கு வல்லுநர் திருமதி.ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.