பதிவு:2024-10-04 14:30:53
திருவள்ளூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் அக் 05 : திருவள்ளூர் நகராட்சி, காந்தி தெரு பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
பின்னர் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பட்டுபுடவைகள், வேட்டிகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை ரகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார்.இந்த ஆண்டு பல்வேறு அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக அவர்களின் நிறுவனத்திற்கே நேரிடையாக சென்று வளாக விற்பனையும் செய்து வருகிறோம்.
மேலும், எங்களது மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 11மாத சந்தா தொகையை மட்டுமே செலுத்தி 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துவதால் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 30 சதவீதம் தள்ளுபடியை ஆண்டு முழுவதும் பெற்று கூடுதல் பலன் அடைவதுடன் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பலனடைந்தும் வருகின்றனர்.தீபாவளி 2024 பண்டிகைகால விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸ் பட்டு, பருத்தி இரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை விற்பனைக்காக பெருமளவு தருவிக்கப்பட்டுள்ளன.
தற்போது தீபாவளி 2024 பண்டிகை கால விற்பனை 15.09.2024 முதல் 30.11.2024 வரை 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனையை திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ 30.00 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கோ-ஆப்டெக்ஸ் துணிகளை கொள்முதல் செய்து தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ்மண்டல மேலாளர் கே.அருள்ராஜன், விற்பனை மேலாளர்கள் பழனிச்சாமி, துளசிதாஸ், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர் சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.