பதிவு:2024-10-07 12:16:56
புட்லூர் ராமாபுரத்தில் மின் கசிவு காரணமாக 3 வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பல் : ரூ. 2 லட்சம் பணம் இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து நாசமானது :
திருவள்ளூர் அக் 06 :திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியம் புட்லூர் ஊராட்சியில் உள்ள ராமாபுரம் ஸ்ரீராம் நகர் 2-ஆவது தெருவில் ராதா ரவி, ராஜா, சந்திரசேகர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளிகளான இவர்கள் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் திடீரென காலை 11 மணியளவில் ராதாரவி என்பவரது வீட்டில் மின் கசிவு காரணமாக வீடு முழுவதும் எரியத் தொடங்கியது.
இதை பார்த்த வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் வீட்டிற்கு வெளியே ஓடி வந்துவிட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளிலும் அந்த தீ பரவியது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த புகாரின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் மின் கசிவு காரணமாக மூன்று வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது. அதிர்ஷ்டவசமாக காலை கூலி வேலைக்கு சென்றதாலும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணம், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்த இந்த மூன்று பேரின் வீடுகளும் தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த தீ விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.