திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

பதிவு:2022-05-31 15:10:59



திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் : பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், 25 வேப்பம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பாலாஜி நகரில் பார் வசதியுடன் அரசு புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. சென்னை}திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டன்லப் நகர், பூம்புகார் நகர், சீனிவாசநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 2 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வரும் நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே முக்கிய பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் குடிகாரர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதி விபத்து அதிகம் நடைபெறும் இடமாகும்.

அதனால் மதுக்குடித்துவிட்டு வருவோரால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதனால் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டாபிராம் காவல் துறை உதவி ஆணையாளர் சதாசிவம், செவ்வாப்பேட்டை காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயற்சித்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, இப்பகுதியில் ஏற்கெனவே பிரச்னைகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் முக்கிய பிரதான சாலையில் அரசு மதுபான கடை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோருக்கும் மனு அளித்திருந்தும் கடை திறக்காமல் இருக்க எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே இந்த இடத்திலிருந்து அரசு மதுபான கடையை மாற்றுவதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு விடியல் கிடைக்கும் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த தங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாக பொது மக்களே வேதனை தெரிவித்தனர்.