பதிவு:2024-10-17 10:44:53
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுக்க கொட்டும் மழையில் 72 வயது மூதாட்டியை 20 நிமிடம் ஸ்ட்ரெச்சரில் காக்க வைத்த அவலம் :
திருவள்ளூர் அக் 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த நேமம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்ற 72 வயது மூதாட்டியை அவரது மகன் உடல் நலக்குறைவு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது அவசர பிரிவில் சோதனை செய்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து வர சொல்லி பரிந்துரைத்துள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவமனை காவலாளி ஒருவர் மூதாட்டியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து கொண்டு வந்தவர் ஸ்கேன் எடுப்பதற்கு பணம் கட்டி அதற்கான ரசீதை கொண்டு வந்தால் மட்டுமே ஸ்கேன் மையத்திற்கு கொண்டு செல்வேன் என கூறியதால் அவரது மகன் பணம் கட்ட சென்றுள்ளார். ஆனால் மழை பெய்து கொண்டிருந்தபோது காவலாளி மட்டும் குடை பிடித்தவாறு நின்று இருக்க மூதாட்டி மீது போர்வை ஒன்று போர்த்திய நிலையில் மழையில் நனைந்தவாறு இருக்க கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்து மகன் ஸ்கேன் எடுப்பதற்கான பணம் கட்டிவிட்டு பில்லை கொண்டு வந்து காண்பித்த பிறகு அவரை அழைத்து சென்றுள்ளார்.
இது குறித்து மகன் கூறும்போது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டினால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறியதால் நான் பணம் கட்ட உள்ளே சென்றிருந்த நேரத்தில் மழை பெய்ததை பொருட்படுத்தாமல் அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வராமல் இருந்ததாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையின் அலட்சியத்தை பொதுமக்கள் கடுமையாக சாடினர்.