பதிவு:2024-10-17 10:46:31
காக்களூர் பூந்தோட்டம் தெருவில் உள்ள 50 குடியிருப்புகளை கழிவுநீர் கலந்த மழை நீர் முழங்கால் அளவில் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர் :
திருவள்ளூர் அக் 17 : திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பூந்தோட்டம் மற்றும் சாய் நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 45 ஆண்டுகள் மேலாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்புகளை சுற்றி பாசி படர்ந்த கழிவு நீருடன் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மழைநீர் சூழ்ந்து இருப்பதால் பால் பாக்கெட் மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.கடந்த நான்கு மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் நிலத்தடி குடிநீரும் அசுத்தம் அடைந்து இருப்பதால் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி இருப்பதால் டெங்கு மலேரியா என காய்ச்சலுக்கு மக்கள் உள்ளாகி உள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பாக அப்பகுதியில் மழை நீர் கால்வாய் முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டு இருப்பதாலும் சாலை வசதி ஏற்படுத்தாதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வருடம் தோறும் பருவமழை காலங்களில் இத்தகைய நிலையானது ஏற்பட்டு வருவதால் முறையாக அரசு மழைநீர் கால்வாய் அமைத்து சாலை அமைத்து தர வேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.