பதிவு:2024-10-20 18:05:20
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் :
திருவள்ளூர் அக் 19 : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அரசாணை (நிலை) எண். 209, பள்ளிக் கல்வி (பொது-2)த்துறைநாள் 14.03.2024-ன் படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் 100 இடங்களில் நூலகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்திலேயே முதல் நூலகம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது :
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நூலகம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதுபோன்றற இடங்களில் நூல்கள், நாளிதழ்களை பொதுமக்கள், பல்வேறு தரப்பினர்கள் பார்வையிடுவர். அதன் மூலம் வாசிப்புப் பழக்கம் உருவாகும்.தமிழகத்தில் 100 இடங்களில் பூங்காவுடன் அமைந்த நூலகம் அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, முதல் நூலகமாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 50 பேரும், நூலகப் பூங்காவிலும் 50 பேரும் அமர்ந்து புத்தகங்கள் படிக்கலாம். இந்த நூலகத்தை உருவாக்கித் தந்த குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மற்ற மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் இதுபோன்ற நூலகப் பூங்காவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருப்பது போல் பார்வையற்றோர் ஆடியோ மூலம் கேட்கும் வசதி இந்த நூலகத்தில் உள்ளது.
மாநில அளவில் சென்னையில் மட்டுமின்றி மாவட்ட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறேன். வாசிப்புப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாசிப்போர் இயக்கம் ஒன்றைற கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு பள்ளியிலும் நாள்தோறும் 20 நிமிஷம் மதிய வேளையில் நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் கட்டுரை, ஓவியங்கள், கவிதைகள் புனையும் போட்டியையும் நாங்கள் நடத்தி வருகிறேன்.
மாநில அளவில் 226 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டேன். இன்னும் 8 தொகுதிகளுக்கு மட்டும் செல்லவில்லை. பள்ளிகளில் சிறறந்த உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.63.15 லட்சம் மதிப்பில் புதிதாக அமைத்த கிளை நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பின்னர் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலைஞர் 100 மக்கள் கூடும் பொதுவிடங்களில் நூறு நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் தமிழ் நாட்டிலேயே முதல் நூலகத்தினை திறந்து வைத்து நூலக வளர்ச்சிக்காக ரூ.50,000 காசோலையினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் வழங்கினார்.
இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி) எஸ்.சந்திரன் (திருத்தணி).டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) துரை சந்திரசேகர் (பொன்னேரி) மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்ரீநிவாச பெருமாள், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் எஸ்.கந்தசாமி, திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் பொ.உதயமலர் பாண்டியன், மாவட்ட நூலக அலுவலர் சென்னை கூடுதல் (பொ) திருவள்ளூர் மு.கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.