பதிவு:2024-10-21 14:57:53
திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த காளானை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சிகிச்சை :
திருவள்ளூர் அக் 21 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (46). இவர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று லட்சுமி தன் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் முளைத்திருந்த காளானை பறித்து சமைத்துள்ளார். அந்த உணவை நேற்று காலை லட்சுமி மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகிய 5 பேரும் சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அந்த காளானை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு கொண்டு சேர்க்கப்பட்டு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.