பதிவு:2024-10-28 12:14:23
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் அக் 26 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (50 இடங்களிலும்), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் (7 இடங்களிலும்) ஆகியவற்றின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 23,088 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3115 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 12846 விவசாயிகளுக்கு ரு.14.99 கோடி இழப்பீட்டுத் தொகையும் ராபி பச்சை பயறு க்கு 100 விவசாயிகளுக்கு 0.069 கோடி இழப்பீட்டுத் தொகையும் கடந்த செப்டம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.518 வீதம் காப்பீட்டு கட்டணமாக செலுத்தி நவம்பர் 15 ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.சம்பா நெற்பயிருக்கு இதுவரை 2581 விவசாயிகள் 2655 எக்டர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராம அளவிலான செயல் அலுவலர்களை அணுகி பி.எம்.கிசான் இணையதளத்தில் (https://pmkisan.gov.in/) பதிவு செய்யும் முறையை கேட்டறிந்து உடனடியாக பதிவு செய்யவும், கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் நிழல் வலை குடில் அமைப்பதற்கு 3000 ச.மீ. இலக்கு பெறப்பட்டு 1 பயனாளிக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. மேலும் பசுமை குடில் அமைப்பதற்கு 8000 ச.மீ. இலக்கு பெறப்பட்டு 4 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 3600 ச.மீ பரப்பளவில் பணிகள் முடிக்கப்பட்டு 2 பயனாளிகளுக்கு ரூ.16.83 இலட்சம் மானியம் விடுவிக்க பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை மூலம் திரவ உயிர் உரம்., ஜிங்க் சல்பேட், மற்றும் ஆடா தொடா நொச்சி இடுபொருட்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் இடு பொருட்கள் வழங்கப்பட்டது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்டது
கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெ.மோகன், துணை இயக்குநர் மாநில திட்டம் வேதவல்லி, தனி துணை ஆட்சியர் கணேசன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம், நிர்வாக இயக்குநர், கூட்டுறவு சார்கரை ஆலை, மண்டல மேலாளர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலர்களும் 180-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்துக்கொண்டனர்.