பதிவு:2024-10-28 12:36:40
பண்ணுர் அந்தோனியார்புரத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்:
திருவள்ளூர் அக் 28 : கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னூர் கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட பண்ணுர் அந்தோனியார்புரம் மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை, பண்ணூர் பேருந்து நிலையம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பந்தியூர் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.