பதிவு:2022-06-02 13:44:30
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்
திருவள்ளூர் ஜூன் 02 : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடைபெற்ற அரசு விழாவில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயணிகளுடன் கலந்துரையாடி விழாபேருரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவர்க்கும் வீடு கட்டும் திட்டம், போஷன் அபியான் திட்டம், பிரதான்மந்திரி மாத்ரு வர்தனா திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், பிரதான்மந்திரி ஸ்வநிதி திட்டம், பிரதான்மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதான்மந்திரி முத்ரா யோஜனா திட்டம், உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அறியும் வகையில் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை ஜெயக்குமார், சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொ) இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எபினேசன், சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.