பதிவு:2024-11-04 16:18:22
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலநிலை தாங்கும் திறன் மற்றும் கார்பன் குறைப்பு குறித்த பயிற்சி :
திருவள்ளூர் நவ 04 : காலநிலை தாங்கும் திறன் மற்றும் கார்பன் குறைப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக சுற்றுப்புற சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் செயல்பாட்டினை ஊக்கபடுத்துவதற்காகவும், தங்களது பங்களிப்பை அதிகரிக்கவும் ஏதுவாக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு மற்றும் இளைஞர் மன்ற பிரதிகளுக்கான பயிற்சியின் துவக்க நிகழ்ச்சி பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் திருவள்ளூர் ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி. ஸ்டீபன் பேசும் போது, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் உள்ள 26 பஞ்சாயத்துகள் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தின் 14 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய மொத்தம் 40 பஞ்சாயத்துகளில் காலநிலை தாங்கும் திறன் மற்றும் கார்பன் குறைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக 200 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், 600 மகளிர் குழு தலைவிகள் மற்றும் 600 இளைஞர் மன்ற தலைவர்களுக்கு காலநிலை தாங்கும் திறன் மற்றும் கார்பன் குறைப்பு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பின் அவசியம் மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்த பயிற்சிகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கு சொந்தமான 30 சென்ட் பரப்பளவில் தலா 1,500 மரங்களை கொண்ட 40 குறுவனங்கள் (ஆக்சி பார்க்) உருவாக்கப்பட உள்ளன. இந்த குறுவனங்களில் 24 வகையான 60,000 மரங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் நடப்படும். இந்த முயற்சியால், தமிழக அரசின் பசுமை தமிழக திட்டத்திற்கு பங்களிப்பதாக அமையும்.ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்துக்கள்,வனத்துறை மற்றும் வேளாண்மை துறையுடன் இணைந்து ஜெர்மனி அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில், தொழில்நுட்ப உதவிக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சிகள் விளைவாக கிராமங்களில் நிலத்தின் நீர்மட்டம் உயரவும் மண் சத்து மேம்படவும், வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் மரம் வளர்த்தல் நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பி. வெங்கட்ரமணா பேசுகையில் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம் சிறுவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பணி செய்வதோடு சுற்றுப்புற சூழல் சம்பந்தமான பணிகளையும் செய்ய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டதோடு பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணி இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பூண்டி வட்டார துணை பெருந்தலைவர் டி. மகாலட்சுமி மோதிலால், சீத்தஞ்சேரியில் உள்ள ரெட்ஹில்ஸ் வனச்சரக அலுவலர் கிளமண்ட் எடிசன், பூண்டி வனச்சரக அலுவலர் சிவபெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். முரளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி. மகேஷ்பாபு பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் அ. இளையராஜா ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) பி பரசுராமன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
இப்பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு, உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு தலைவிகள் இளைஞர் குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதன் தொடர்ச்சியாக எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பை சார்ந்த திருவள்ளூர் இயக்குனர் ஹேப்பி லதா மற்றும் ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இறுதியாக திட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன் நன்றியுரை ஆற்றினார்.இதில் கள ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணி, வசுமதி அருள், ஹேமலதா, பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.