பதிவு:2024-11-08 12:41:14
காக்களூர் ஊராட்சியில் தெரு சாலை அமைக்காததால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியோர்கள் அவதி :
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூங்கா நகரை ஒட்டிய ஒரு கிலோமீட்டர் தூரம் அல்ல சிங்காரவனம் தெருவில் 200 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தெருவில் முறையான சாலை அமைக்காமல் திமுக ஊராட்சி நிர்வாகத்தினர் அலைக்கழித்து வருகின்றனர்.
அதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் இரு சக்கர வாகனத்தை வீட்டிலிருந்து எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் ஆத்திர அவசரத்திற்கு கார் வேன் போன்ற வாகனங்களும் வர முடியாத நிலை இருக்கிறது. பட்டா வசதியுடன் கூடிய நிலத்தில் வீடு கட்டி போதிய சாலை வசதி இல்லாததால் அங்கு வாழும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.
கிட்டத்தட்ட கடந்த நான்கு முறையும் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களே பொறுப்பில் இருந்தும் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை பகுதி மக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயும் இல்லாததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது.
இதனால் துர்நாற்றம் பேசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும் பட்டா நிலத்திற்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டி அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு மனை பட்டா இருந்தும் இங்கு சாலை அமைக்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தெரு முழுவதும் செடிகள் வளர்ந்து இருப்பதால் நடந்து செல்லவோ, இரு சக்கர வாகனத்தில் செல்லவும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சிங்காரவனம் தெருவில் முறையான சாலை அமைத்து பொதுமக்கள் எளிதில் சென்று வரக்கூடிய வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.