பதிவு:2024-11-12 15:32:38
திருவள்ளூர் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு : கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு :
திருவள்ளூர் நவ 12 : திருவள்ளூர் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை நம்பி வாழ்வாதாரத்தை கழித்து வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் விவசாயத்தையே நம்பியுள்ள மக்கள் அனைத்து வரிகளும் உயர்வதால் சிரமத்திற்கு ஆளாகக் கூடும் என்பதால் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2-ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பில்லா (எ) சதீஷ் குமார் வார்டு உறுப்பினர்கள் பைரவன், முருகம்மாள், சரளாதேவி, பிரவீணா லட்சுமிதேவி உள்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.அப்போது ஒரு பெண் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. ஏழ்மையான, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வரும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். மேலும் கணவனை இழந்த நான் இருக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த வேலையை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். மேலும் திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் போது வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துவிடும். இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய நிலைமையுள்ளது.
மேலும் கிராமத்திற்கு கிடைக்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்கள் இதனால் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே திருவள்ளூர் நகராட்சியுடன் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.