பதிவு:2024-11-12 15:35:35
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உயர்வு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் நவ 12 : தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவி குழுக்களான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 க்கு மிகாமலும் இருந்த ஆண்டு வருமானமானது தற்போது ரூ.3,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்சகடனாக ரூ.20,00,000 மும், கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 மும், சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்திலும், சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-இன் கீழ் தனிநபர் கடன் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 மும், கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 6% பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 மும், சுய உதவிக்குழுக் கடன் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 மும், சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி,தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மதத்திற்கான சான்று, ஆதார்அட்டை, வருமானசான்று, உணவுபங்கீடுஅட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் இணைத்துமனுக்கள்சமர்ப்பிக்கப்படவேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும். எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.