பதிவு:2024-11-13 16:41:31
திருவள்ளூர் அருகே 13 கிலோ குட்கா கடத்திய வழக்கில் ஊராட்சி செயலர் கைது : ஊத்துக்கோட்டை போலீசார் நடவடிக்கை :
திருவள்ளூர் நவ 13 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள விஷ்ணுவாக்கம் ஊராட்சி செயலாளர் நசுருதின். விஷ்ணுவாக்கம் அடுத்த விளாப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த இவர் வீட்டு அருகே கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா புகையிலைப் பொருட்களை ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த போது இவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து இவரிடமிருந்து 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்த நிலையில் கிராமத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குட்கா கடத்தல் சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது குட்கா கடத்தல் வழக்கில் ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டு இருப்பதால் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என தெரிவித்தனர். திமுக ஆட்சியில் ஊராட்சியின் செயலரே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.