பதிவு:2024-11-22 15:19:53
மெய்யூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்து வழங்காமல் அலைக்கழிப்பு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை :
திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர் கிராமத்தில் கடந்த 2000-ஆவது ஆண்டில் திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 180 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை என தெரிகிறது.
ஆனால் தற்போது வீடு கட்டாத மனைகளின் பட்டாவை ரத்து செய்வதாக வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்க 5 பேரை மட்டும் அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்ததால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மக்களை பார்த்து மனு அளித்த காவல் துறை அனுமதி அளித்ததையடுத்து நேரில் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.
24 ஆண்டுகளாக நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழித்த நிலையில் நிலத்தை முறையாக அளவீடு செய்து வழங்கினால் வீடு கட்டி குடியேறத் தயாராக இருப்பதாக ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.