பதிவு:2024-11-23 12:42:41
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் : சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் :
திருவள்ளூர் நவ 22 : ஓசூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார்.இந்நிலையில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கூட்டமைப்பை சார்ந்த வழக்கறிஞர்கள் ராம்குமார், ஆதாம், ஜெய்சுந்தர், லேமுவேல் முரளி, சுனில், சுந்தரேசன் உள்பட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கறிஞர்களுக்கு என தனி பாதுகாப்புச் சட்டத்தினை இயற்ற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு என பாதுகாப்புச் சட்டத்தினை ஒரு வார காலத்திற்குள் முதல்வர் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.