பதிவு:2024-11-23 15:50:50
தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் பழங்குடியின மீனவ மக்களுக்கு மீன் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் செய்முறை விளக்க பயிற்சி :
திருவள்ளூர் நவ 23 : தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை உதவியுடன் செயல்படுத்தப்படும் தொல்குடி வேளாண்மை மேலாண்மை (ஐந்திணை) திட்டத்தின் மூலம் பழங்குடியின மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கு பூண்டி ஒன்றியத்தில் உள்ள 90 மீனவ பழங்குடியின மக்களுக்கு மீன்பிடி படகு மற்றும் வலை, மீன்பிடி வலை, மீன் விற்பனை தள்ளுவண்டி, மீன் விற்பனைக்கான குளிர்சாதான பெட்டி ஆகியவை பழங்குடியினர் நலத்துறை நிதியுதவியுடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின், ஒரு பகுதியாக பழங்குடியின மீனவ மக்களுக்கு நவம்பர் 20, 2024 அன்று மீன் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் செய்முறை விளக்க பயிற்சி புதூர் காந்தி கிராமத்தில் வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் நோக்கத்தை பற்றி ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் டி.விஜயன் எடுத்துரைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பொன்னேரியில் உள்ள டாக்டர்.எம்ஜிஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பேராசிரியர் டாக்டர். நிமிஷ் மோல் ஸ்டீபன் மற்றும் பிரதீப் மீன் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் விவரம், பயன்கள், அவற்றின் மதிப்புகள் பற்றியும் மீன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எவ்வாறு வியாபாரம் செய்வது, எந்தெந்த இடத்தில் வியாபாரம் செய்வது என்பது பற்றி விளக்கி கூறினார்கள்.
பின்னர், மீன் ஊறுகாய், பேட்டர்ட் இறால், மீன் கட்லெட், மீன் சமோசா மற்றும் மீன் செதில் ஃப்ரை ஆகியவற்றின் செய்முறை விளக்க பயிற்சி பழங்குடியின மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவை பற்றி விழிப்புணர்வு வழங்கினார். மேலும் இப்பயிற்சியில், பட்டரைபெரும்புதூர் மீனவ சங்க தலைவர் இயேசு பிள்ளை மற்றும் 65 பழங்குடியின மீனவ மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ.தினேஷ் குமார் நன்றி கூறினார்.