நம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

பதிவு:2022-06-02 17:17:56



நம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

நம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், நம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

முகாமில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 200 பயனாளிகளுக்கும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித் தொகை 52 பயனாளிகளுக்கும், இருளர் பழங்குடியினர் சான்று 206 பயனாளிகளுக்கும், இருளர் பழங்குடியினர் நலவாரிய அட்டை 77 நபர்களுக்கும், கிராம நத்தம் வீட்டுமனை பட்டா 14 நபர்களுக்கும், மருத்துவ காப்பீட்டு அட்டை 40 நபர்களுக்கும், புதிய மின்னனு குடும்ப அட்டை 105 நபர்களுக்கும், ஒரு நபருக்கு உட்பிரிவு பட்டா மாறுதலும் என மொத்தம் 697 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்றைக்கு 697 பயனாளிகளுக்கு ரூ. 13,80,496 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் வேளாண் இடுபொருட்கள் 4 பயனாளிகளுக்கும்,10 ஆதிதிராவிடர் பெண் பயனாளிகளுக்கு தலா ரூ. 5,580 வீதம் ரூ.55,800 மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களும்,மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களும், மாற்றுத்திறனாளி துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.7,800 வீதம் ரூ.39,000 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலிகளும், 4 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் என மொத்தம் 722 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக, இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் சர்வதேச பெற்றோர் தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக பெண் குழந்தைகளின் பிறப்பினை கொண்டாடும் வகையில் பெண் குழந்தைகள் பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இம்முகாமில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் கைப்பேசிக்கு சத்துணவு, தடுப்பூசி, பச்சிளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் குழந்தை வளர்க்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை குறுஞ்செய்தி,வாய்ஸ் மெசேஜ்; மூலம் தகவல் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அமுதம்” என்ற சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

முகாமில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) எஸ்.கோவிந்தராஜன், தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் (பொ) எம்.ஏ.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கே.ஆர். ஜவஹர்லால், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகாலட்சுமி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கே.பி.ரமேஷ், தனி வட்டாட்சியர் லதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.