பதிவு:2024-11-29 11:37:44
திருவள்ளூர் எஸ் பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது : அவர்களிடமிருந்து நான்கு செல்போன் இரண்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஜி.என். மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திருவள்ளூர் டோல்கேட் அருகே ஊத்துக்கோட்டை சாலையில் சோதனை செய்தபோது மூன்று பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பூண்டி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜீவா (20), காக்களூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சஞ்சய் (21), டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் ராஜ்குமார் என்கிற டேவிட் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஜீவா, சஞ்சய், ராஜ்குமார் என்கிற டேவிட் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, நான்கு செல்ஃபோன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.