பதிவு:2024-11-29 11:45:41
பாக்கம் கிராமத்தில் உள்ள யூகோ வங்கியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள், விவசாயிகள், வணிகர்கள் வங்கு கணக்கு தொடங்கி உள்ளனர். அதனால் அந்த வங்கி இப்பகுதி கிராமப்புற மக்களுக்கு உதவியாக இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் இந்த வங்கியை இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநின்றவூருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை வங்கி நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாய பெருமக்களும் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த வங்கியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் வங்கியை இடமாற்றம் செய்ய நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கம் வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில நிர்வாகி விசுவநாத் வெள்ளையன், மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சாலமன் தலைமையில் வணிகர்கள் கடையை அடைத்தும், பொது மக்கள், விவசாயிகள், வணிகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், வழக்கறிஞர்கள் இணைந்து ஒரு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த யூகோ வங்கி கிளையை இங்கிருந்து மாற்றக்கூடாது என்றும் வேறு கிளையை வேண்டுமென்றால் திறந்து கொள்ளலாம் என்றும், இந்த வங்கி இங்கேயே செயல்பட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்படி தவறும் பட்சத்தில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மக்கள் பிரதிநிதிகளோடு மிகப்பெரிய போராட்டத்தை அரசின் கவனத்தில் ஈர்க்கும் அளவிற்கு நடத்தப் போவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் எச்சரித்தனர்.