பதிவு:2024-11-29 11:49:26
திருவள்ளூரில் திமுக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் பணிச்சுமை அதிகம் உண்டாவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணிகள் புறக்கணிப்பு காத்திருப்பு போராட்டம் :
திருவள்ளூர் நவ 29 : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க கடந்த 25 10 2024 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்து ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 29 10 2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் தற்செயல் விடுப்பு எடுத்து இரண்டாம் கட்ட போராட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்ணிலை தலைமையில் 3-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கருணை அடிப்படை பணி நியமனம் என்பது 25 சதவீதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால் வாரிசுகளுக்கு பணிகள் ஏதும் கிடைக்காத ஒரு சூழல் இருக்கிறது. துணை ஆட்சியர் பட்டியல் இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் உள்ளது. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் காலியாக உள்ளது.
கடந்த 31 3 2023 அன்று பேரிடர் மேலாண்மை துறையில் 97 பணியிடங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கலைத்து விட்டனர். இதனால் பேரிடர் மேலாண்மை காலகட்டத்தில் அந்த பிரிவில் பணிபுரியும் அலுவலர்கள் மிகச்சிறந்த சிரமங்களை அனுபவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களைத் தேடி, உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா? இதுபோன்ற திட்டங்களில் பல்வேறு பணிச்சுமைகள் நமது வருவாய் துறை சார்ந்த ஊழியர்களுக்கு உள்ளது என்றும், இதில் நிதி சார்ந்த கோரிக்கைகள் உள்ளதையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மாநில மையத்தை அழைத்து பேச வேண்டும் என்றும், அரசாணைகள் வெல்லும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜே.கே.ஜெயகர்பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் பெருமாள் உட்பட ஆட்சியர் அலுவலக வருவாய்துறை ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.