பதிவு:2022-06-02 17:20:55
திருவள்ளூர் அருகில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 13 வயது சிறுவன் உடல் 2 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் ஒதுங்கியது
திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த காவலாளி (செக்யூரிட்டி) ரமேஷ் என்பவரின் மகன் பூபதி . இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 31-ந் தேதி காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் உடல் உபாதையை கழிக்க சென்றுள்ளான். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பூபதியின் பெற்றோர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில் இருந்து வரும் கிருஷ்ணா கால்வாய் அருகில் சென்று பார்த்த போது அவ னது செருப்பு மட்டும் அங்கு இருக்கவே அவன் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் நிலையத்திற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் பூபதியின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணா கால்வாயில் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் அனஞ்சேரி கிராமத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் மாணவனின் உடல் ஒதுங்கியுள்ளது.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு அனஞ்சேரியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் பூபதியின் அண்ணன் வருண் என்பவனும் ஆறு வயதில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. காவலாளி ரமேஷின் 2 வது மகனும் கிருஷ்ணா கால்வாயில் விழுந்த உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.